23 August 2014

அஞ்சலி

                                                                        அஞ்சலி

பொது சுகாதாரத்துறை இணை இயக்குனர் ( இம்யூனிசேஷன்) டாக்டர் திரு.என்.அய்யனார் அவர்கள் இன்று 23.08.2014 அதிகாலை சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் மாரடைப்பினால் காலமானார்.என்ற செய்தி ஏ.பி.எம். டாக்டர் தினேஷ் அவர்கள் மூலம் குறுஞ்செய்தியாகக் கிடைக்கப் பெற்றது.டாக்டர் அய்யனார் அவர்களின் இழப்பு துறைக்கு ஈடுசெய்ய முடியாத இடைவெளியை ஏற்படுத்தி விட்டது.
    நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை பாலுமகேந்திரா கேப் என பார்த்தவுடனே கொஞ்சம் அசத்தும் தோற்றத்துக்குச் சொந்தக்காரர்.எளிமையான குடும்பத்திலிருந்து படித்து இந்த நிலைக்கு உயர்ந்தவர்.இவர் மதுரை மருத்துவக்கல்லூரியில் படித்தபோது இவருடன் பழகும் வாய்ப்பைப் பெற்ற நண்பர் செல்வமோகனக்குமார் கண்மருத்துவ உதவியாளர் அவர்கள் இவரது எளிமையினைப்பற்றி பிரஸ்தாபித்துக் கூறுவார்.(சைக்கிளில் இருவரும் சாப்பிட மெஸ்ஸுக்கு செல்லுவார்களாம்.)
 தருமபுரி துணை இயக்குனராக இருந்தபோது மாநிலத்திற்கே முன்மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.ஏனைய மாவட்டங்களில் இருந்து ஒரு குழுவாக மருத்துவர்களை தர்மபுரி மாவட்டத்திற்கு அனுப்பி ஆரம்ப சுகாதார நிலையங்களை பார்வையிட்டு வர துறை கேட்டுக்கொண்டது.
                      தஞ்சை மருத்துவக்கல்லூரியில் 25.2.14 அன்று டாக்டார் முத்துலெட்சுமிரெட்டி மகப்பேறு நிதி உதவித்திட்டம் தொடர்பான மண்டல ஆய்வுக்கூட்டம் நடந்தது.இதில் இணை இயக்குனர் திரு.அய்யனார் அவர்கள் உரை யினை கேட்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியது.சப்ஜக்ட் தவிர வேறு எங்கும் திசைதிரும்பாமலும் அதே நேரத்தில் பார்வையாளர்களைச் சோர்வடையச் செய்யாமலும் பேசுபவர்கள் அபூர்வம்.5000 மக்கள் தொகை கொண்ட ஒரு துணை சுகாதார நிலைய கிராம சுகாதார செவிலி ஒருநாளைக்கு எவ்வளவு பிக்மி எண்ட்ரி போடவேண்டியிருக்கும் என வரையறுத்துச் சொன்ன விதம் எளிதில் பிடிபட்டது.ஒரு பேராசிரியரின் நுனுக்கம் இவரது பேச்சில் இருந்தது.


நான் அவரிடம் பணிபுரிந்ததில்லை.11.4.13 நக்கீரன் பத்திரிக்கையில் டாக்டர் முத்துலட்சுமிரெட்டி மகப்பேறு நிதி உதவித்திட்டத்தில் உள்ள குழப்பங்களை எழுதி துறையையும் பணியாற்றுபவர்களையும் சாடியிருந்தனர்.நான் அதற்கு ஒரு மறுப்புறையை (லிங்க்) எனது வலைப்பூவில் எழுதியிருந்தேன்.அதனைப்படித்த அவர் ஒரு நண்பர்மூலமாக வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.அப்போது அவர் இம்யூனிசேஷன் இணைஇயக்குனராக இருக்கவில்லை என நினைக்கிறேன்.
நல்ல நிர்வாகியை துறை இழந்து விட்டது.
இன்று காலை செல்வமோகனக்குமார் அவர்கள் தொலைபேசியில் இச்செய்தியை கூறிவிட்டு இவ்வளவு உயர் பதவியில் இருக்கும் மருத்துவர்களே தங்கள் உடல் நலத்தை முறையாக செக்கப் செய்துகொள்ளாமல் இருப்பது விந்தையாக இருக்கிறது என்றார். உண்மையில் யோசிக்க வேண்டிய விஷயம்தான்.