24 April 2013

பெண்கள் நலத்திட்டம்



                               
பெண்கள் நலத்திட்டம்


  பெண்கள் நாட்டின் கண்கள். பெண்களின் உடல் நலனில் அக்கறை காட்டுவது அவசியம். பெண்களை பாதிக்கக்கூடிய புற்றுநோய்களில், கருப்பைவாய் புற்றுநோய் முதலிடத்திலும், மார்பகப் புற்றுநோய் இரண்டாம் இடத்திலும் உள்ளன. இவற்றை ஆரம்ப நிலையிலேயே பரிசோதனை மூலம் கண்டறிந்து, உரிய சிகிச்சையளித்தால் முற்றிலும் குணப்படுத்த முடியும்.
   
புற்றுநோய் பாதிப்பு 

                 இந்திய மக்கள் தொகையில் 25 இலட்சம் பேர் புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாக தேசிய பொருளாதார மற்றும் சுகாதார ஆணையம் கணக்கிடப்பட்டுள்ளது.  2005ல் கருப்பைவாய் புற்றுநோயால் ஒரு இலட்சம் பெண்களில் 21 பெண்களும், மார்பக புற்று நோயால் 17 பெண்களும், வாய் புற்றுநோயால் 12 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கிட்டுள்ளது.

பரிசோதனையின் அவசியம்



                  புற்று நோயால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு நோயின் அறிகுறிகள் உடனடியாக வெளியில் தெரியாது.  விரைவில் உடலின் பிற பகுதிகளையும் பாதிக்கக்கூடியது. மேலும் நீண்ட நாட்கள் நீடிக்கக் கூடியது. ஆனால் இவற்றை எளிய பரிசோதனையின் மூலம் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சையளித்து முற்றிலும் குணப்படுத்த முடியும்.  இதனடிப்படையில் தமிழக அரசால்  கொண்டு வரப்பட்ட திட்டம் பெண்கள் நலத்திட்டம் ஆகும்.
பெண்கள் நலத்திட்டத்தின் நோக்கங்கள்

       1.  கருப்பைவாய் மற்றும் மார்பக புற்றுநோயின்அறிகுறிகளைப் பற்றி விழிப்புணர்வு     ஏற்படுத்துதல்.

      2. நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, உரிய சிகிச்சையளித்து பூரண குணமடையச்       செய்தல்.

     3. பெண்கள் தாமாகவே சுய மார்பக பரிசோதனை செய்து கொள்ள பயிற்சியளித்தல்.

     4. எளிய முறையில் கருப்பைவாய் மற்றும் மார்பக மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள       ஊக்குவித்தல்.

                           
                                                   

தன்னார்வலர்களின்  பணிகள் 

· கிராமப்புறங்களில் உள்ளூரில் வசிக்கும் எட்டாவது படிக்கும் பெண்கள இத்திட்டத்தில் தன்னார்வலர்களாக அறிமுகப்படுத்தப்படுகிறார்கள்.
· மக்களிடையேயும் மருத்துவப் பணியாளர்களிடையேயும்  ஒரு தொடர்பு நபராக செயல்பட வேண்டும்.
· 30 வயதும் அதற்குமேற்பட்ட வயதுடைய பெண்களையும்  தொடர்புகொண்டு, கணக்கெடுப்பு செய்து பரிசோதனை செய்ய  முகாமுக்கு அழைத்து வரவேண்டும்.
· நோய் இருப்பதாக கண்டறியப்பட்ட பெண்கள்  உரிய சிகிச்சை  மேற்கொள்ள அவர்களுக்கு உதவும் ஒரு இணைப்பு பாலமாக தன்னார்வலர்கள்  இத்திட்டத்தில் உதவி புரிய வேண்டும்.

தன்னார்வலர்கள் தங்கள் பணிகளை மேற்கொள்ள  கடைப்பிடிக்கவேண்டிய  வழிமுறைகள்
· ஒரு முகாமுக்கு 2 தன்னார்வலர்கள் என்ற விகிதத்தில்  தேர்வு செய்யப்பட்டவர்கள், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட  அனைத்து வீடுகளிலும் தகவல்களை சேகரிப்பார்கள்.
· வீடுகளைப் பார்வையிட்டு, தன்னார்வலர்களின் பணி நேரத்தை அந்தந்த பகுதிக்கேற்றவாறு காலை அல்லது மாலை என அமைத்து கொள்ளலாம்
· குடும்பங்களை நேர்காணச் செல்லும்போது  அடையாள அட்டை மற்றும் ஆய்வுக்காக வழங்கப்பட்ட படிவங்களுடன் செல்ல வேண்டியது மிகவும் அவசியம்
· தன்னார்வலர்கள் வீடுகளுக்குச் செல்லும் போது வீட்டில் உள்ளவர்களிடம் தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு,  திட்டம் பற்றி சிறு விளக்கமளித்து, விவரங்களை பகுதி  """"அ"" வில் பூர்த்தி செய்ய  வேண்டும்
· 30 வயதிற்கு மேற்பட்ட ஒவ்வொருவருக்கும் பெயர், கணவர்/தந்தை பெயர், வயது, விலாசம், தொடர்பு எண், கல்வித்தகுதி,  மதம், சமூகநிலை  போன்ற தகவல்களைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
· படிவத்தைப் பூர்த்தி செய்யும்பொழுது மிகவும் நேர்த்தியாகவும், அழகாகவும் எழுதவேண்டும்
· வீடுகளுக்கு செல்லும்போது அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும்.
· தன்னார்வலர்கள் சேகரிக்கும் விவரங்கள் வேறு யாருக்கும் வெளியிடப்படாது என்பதை உறுதியாகத் தெரிவிக்க வேண்டும்.
· தன்னார்வலர்கள் தனக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளில் உள்ள பயனாளிகள் அனைவரையும் விடுபடாமல் கணக்கு எடுக்க வேண்டும்.
· முதல்நாள் விடுபட்டவர்களை அடுத்த நாள் அவர்கள் வீடுகளுக்குச் சென்று படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்
· ஒரு வீட்டில் 30 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் எவருக்கேனும் இறுதி வரை முயற்சித்தும்  படிவம் பூர்த்தி செய்யாமல் விடுபட்டிருந்தால் அந்த வீட்டின் கதவில் பென்சில் அல்லது சாக்பீஸ் கொண்டு படிவத்தில் பூர்த்தி செய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கையை மேலேயும் அதன் கீழ் 30 வயதிற்கு மேற்பட்ட நபர்களின் மொத்த எண்ணிக்கையையும் எழுத வேண்டும்.
            (எ.கா.) ஒரு வீட்டில் 30 வயதிற்கு மேற்பட்ட நபர்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆகவும் அதில் 3 பேருக்கு மட்டும் தான்  படிவம் பூர்த்தி செய்திருந்தால் அந்த வீட்டின் கதவில் 3/4 என்று எழுதவும்.
· 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு, முகாம் நடைபெறும் நாள், இடம், கிராமம் ஆகியவற்றை அவர்களுக்குக் கொடுக்கப்படும்  முகாம் பரிந்துரை சீட்டில் குறித்துக் கொடுக்கப்படவேண்டும்
· கருப்பை வாய்ப்புற்றுநோய் மற்றும் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு தகவல் பற்றிய நலக்கல்வி அளிக்க  வேண்டும்
· கிராம சுகாதார செவிலியர்கள் குறிப்பிடும் முகாம் நடைபெறும் இடத்திற்கு பயனாளிகளை அழைத்து வரவேண்டும்
· கிராம சுகாதார செவிலியரிடம் பூர்த்தி செய்யப்பட்ட பதிவேடுகளை ஒப்படைக்க வேண்டும்.

ஒவ்வொரு நாளும் கீழ் கொடுக்கப்பட்ட விவரங்களை கிராம சுகாதார செவிலியரிடம்  நேரிலோ அல்லது தொலைபேசி மூலமோ சமர்ப்பிக்க வேண்டும்
· பார்வையிடப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை
· புதிதாகக் கண்டறியப்பட்ட பயனாளிகளின் எண்ணிக்கை
· ஏற்கனவே நோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை
· கணக்கெடுப்பில் விடுபட்டவர்களின் எண்ணிக்கை

No comments: