29 July 2014

வயிற்று போக்கு நோயை கட்டுப்படுத்த, விழிப்புணர்வு முகாம்




இந்தியாவில் ஆண்டுதோறும் வயிற்று போக்கு பாதிப்பால், 2.30 லட்சம் குழந்தைகள் இறக்கிறது'' என, திருச்சி மாவட்ட கலெக்டர் ஜெயஸ்ரீ தெரிவித்தார்.
தமிழக சுகாதாரத்துறை மற்றும் சமூக நலத்துறை சார்பில், குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று போக்கு நோயை கட்டுப்படுத்த, விழிப்புணர்வு முகாம் துவக்க விழா, ஸ்ரீரங்கத்தில் நடந்தது.
விழாவில், மாவட்ட கலெக்டர் ஜெயஸ்ரீ பேசியதாவது: ""உலக அளவில், பெரியவர்களுக்கு இதயநோய், ஹெச்.ஐ.வி., சிறுநீரக நோய் ஆகியவை உயிர் கொல்லி நோய்களாக கருதப்படுகிறது. அதே போல், 5 வயது வரையுள்ள குழந்தைகளின் இறப்புக்கு, வயிற்று போக்கு தான் காரணமாக உள்ளது. யுனிசெஃப் புள்ளி விவரப்படி, உலக அளவில், ஆண்டுதோறும், எட்டு லட்சம் குழந்தைகளும், இந்திய அளவில், 2.30 லட்சம் குழந்தைகளும் இறப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தை பிறந்த பின், ஆறு மாதங்கள் கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இதன் மூலம், 16 வயது வரை குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பல மடங்கு அதிகரிக்கிறது. இதனால், கர்ப்பிணி பெண்கள், பிரசவமான பெண்கள், காய்கறிகள், கீரைகள், பழங்கள் உள்ளிட்ட சத்தான உணவு பொருட்களை அதிகம் சாப்பிட வேண்டும்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவுபடி, பிறந்த குழந்தை முதல், ஐந்து வயது வரையுடைய குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று போக்கை கட்டுப்படுத்த, சிறப்பு முகாம் வரும், 8 ம் தேதி வரை நடக்கிறது. இதில், குழந்தைகளுக்கு துத்தநாக மாத்திரைகள், ஓ.ஆர்.எஸ்., பொட்டலங்கள் வீடு வீடாக, அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் வழங்கப்படுகிறது. இதை, குழந்தைகளுக்கு கட்டாயம் கொடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். அரசு தலைமை கொறடா மனோகரன், எம்.பி., குமார், மேயர் ஜெயா, எம்.எல்.ஏ., பரஞ்சோதி, சுகாதார பணிகள் இணை இயக்குநர் ரவீந் திரன், மாநகராட்சி ஆணையாளர் தண்டபாணி, நகர்நல அலுவலர் மாரியப்பன், கோட்ட தலைவர் லதா, கவுன்சிலர்கள் பாபு, முத்துலட்சுமி, பச்சையம் மாள் உட்பட பலர் விழாவில் பங்கேற்றனர்

No comments: