15 February 2009

கேட்ராக்ட் என்றால் என்ன?
செய்திகள் உதவி:http://vanjoor-vanjoor.blogspot.com/வாஞ்ஜுர் குணப்படுத்தக் கூடிய பார்வைக் கோளாறுகளில் முதலிடம் வகிப்பது கேட்ராக்ட் ஆகும். ஆக கண் புரை எனப்படும் கேட்ராக்ட் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டுவது அவசியம்.

பார்வையிழப்பிற்கான மூல காரணங்களில் 66% குணப்படுத்தக்கூடிய அல்லது தடுக்கக்கூடிய காரணங்களால் பார்வையிழந்தவர்கள். பார்வை இழப்பிற்கான முழு முதற் காரணமாக இருப்பது கண் புரை என வழங்கப்படும் முழுமயான குணப்படுத்தக்கூடிய கேட்ராக்ட் நோய் ஆகும்.

கேட்ராக்ட் என்றால் என்ன?

கேட்ராக்ட் என்பது லத்தீன் வார்த்தை. கேட்ராக்ட் என்றால் நீர்வீழ்ச்சி என்று அர்த்தம். இங்கு நீர்வீழ்ச்சியினூடே ஒரு பொருளைப் பார்க்கும்போது கண்ணுக்குப் புலப்படும் தோற்றத்தைப் போன்ற பார்வைக் கோளாறைக் குறிப்பிடுகிறது.

கேட்ராக்ட் என்பது வயோதிகம் காரணமாகவோ, பரம்பரை, விபத்துகள், நீரிழிவு நோய் போன்ற பல காரணங்களால் கண்களில் உள்ள லென்ஸ் தனது ஒளி ஊடுருவும் சக்தியை இழப்பதினால் வரக்கூடிய தன்மை. இதன் காரணமாக லென்ஸில் ஒரு படலம் படர்ந்தது போன்ற சூழ்நிலையில் பார்வை தெளிவாகத் தெரியாமல் மங்கலாகத் தெரிகிறது. நாளடைவில் இந்நிலை அதிகரித்து முழு பார்வை இழப்பிற்கும் காரணமாகிறது. இந்த நிலையே கேட்ராக்ட் எனப்படும்.

கேட்ராக்ட் என்பது பொதுவாக வயோதிகர்களுக்கு மட்டுமே வரக்கூடிய பிரச்னையா? அதற்கான அடிப்படைக் காரணங்கள் என்ன?

கேட்ராக்ட் பொதுவாக வயோதிகர்களுக்கு அதிகமாக வரக்கூடிய பிரச்னை என்றாலும் எல்லா வயதினர்களையும் பாதிக்கக்கூடிய கண் சார்ந்த ஒரு பிரச்னை ஆகும். குறிப்பாக,

சூரிய ஒளியிலிருந்து அதிகமாக வெளிப்படக்கூடிய புற ஊதாக் கதிர்களின் தாக்கம் அதிகமாக ஏற்றுக் கொள்ளும் வகையில் பணியாற்றுபவர்களுக்கும்,

 நீரிழிவு நோய் போன்ற காரணத்தினாலும்,

 கண்களில் ஏதேனும் நோய் தொற்றின் காரணமாக வீக்கம் ஏற்பட்டிருந்தாலும்,

 பரம்பரை மூலக்கூறியல் காரணங்களாலும்

 நாம் பிறப்பதற்கு முன்பே நமது தாய்க்குப் பிரசவ காலத்தில் ஜெர்மன் மீசில்ஸ் எனப்படும் அம்மை நோய் ஏற்பட்டிருந்தாலும்,

 நீண்ட காலம் ஸ்டீராய்டு மருந்துகளை உபயோகித்திருந்தாலும்

 கிட்டப்பார்வை கோளாறு நீண்ட காலம் இருந்திருந்தாலும்

 கண்களில் காயம் ஏற்பட்டிருந்தாலும்

 கண் சார்ந்த மற்ற நோய்கள் ஏதாவது இருந்தாலும்

 புகைப்பிடிப்பதாலும் இளம் வயதினர் உட்பட யாருக்கும் கண்புரை நோய் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு.

 மேலும் பல்வேறு உயிர் வேதியியல் மாற்றங்கள் காரணமாகவும் கேட்ராக்ட் உருவாகலாம்.

 புரோட்டின், வைட்டமின்கள் மேலும் செலினியம் போன்ற நுண்ணிய சத்துக் குறைபாடு இருந்தாலும் கேட்ராக்ட் உருவாகலாம்.

கேட்ராக்ட்டின் அறிகுறிகள்:

ஒவ்வொருவரும் தமக்கு கேட்ராக்ட் இருக்கும்போது வெவ்வேறு அனுபவங்களைப் பெறுகிறார்கள். ஆனாலும் கேட்ராக்ட் பிரச்னை உள்ள அனைவருமே பொதுவாக கீழ்க்காணும் அறிகுறிகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவகளை உணர்வது வழக்கம்.

 பார்க்கும் பொருட்கள் யாவும் தெளிவற்றதாகவும் அல்லது மிகவும் புகை படர்ந்த பின்னணியுடன் மங்கலாகவும் தெரிவது.

 வர்ணங்களைப் பிரித்தறிவதில் சிரமம் மற்றும் பார்க்கும் பொருட்கள் யாவும் மஞ்சள் நிறமாகத் தெரிவது.

 சாதாரண வெளிச்சத்தில் பார்வை தெளிவற்று இருப்பதும் மிக அதிகமான வெளிச்சம் தேவைப்படுவதும்.

 தொலைவில் உள்ள பொருட்களைப் பார்ப்பதில் சிரமம் ஏற்படுவது.

 பொருட்கள் இரண்டு பிம்பங்களாகத் தெரிவது.

 அடிக்கடி கண்ணாடிகளை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்படுவது.

 படிப்பதற்கும் வாகனம் ஓட்டுவதற்கும் சிரமப்படுவது. இந்நிலை பொதுவாக இரவில் சற்று அதிகமாக இருக்கலாம்.

 வெளிச்சத்தைச் சுற்றி வானவில் தெரிவது போல குறிப்பாக வாகனங்களின் விளக்கு வெளிச்சத்தைச் சுற்றி அவ்வாறு தெரியலாம். வர்ணங்கள் தெளிவாகத் தெரியாமல் இருக்கலாம்.

கேட்ராக்ட் ஆபரேஷன் எவ்வாறு செய்யப்படுகிறது?


தற்போது பேக்கோ எமல்ஸிபிகேஷன் என்ற புதிய முறையில் கேட்ராகக்ட் ஆபரேஷன் நடபெறுகிறது.

இந்த புதிய முறை நோயாளியின் கண்ணில் உள்ள இயற்கயான லென்ஸை அகற்றுவதற்கு, முன்பு போல 10 முதல் 12 மில்லி மீட்டர் வரை காயம் ஏற்படுத்த வேண்டிய அவசியம் தவிர்க்கப்பட்டது. இந்தப் புதிய முறையில் நோயாளியின் கண்ணுக்குள் 2 மில்லி மீட்டர் விட்டமே உள்ள ஒரு ஊசி செலுத்தப்பட்டு ஊசியுடன் இணைந்த ஒரு புதிய உபகரணத்தின் (பேக்கோ எமல்சிஃபயர்) மூலமாக கண்ணுக்குள் இருக்கும் லென்ஸ் சிறுசிறு துகள்களாக சிதைக்கப்பட்டு உறிஞ்சி வெளியேற்றப்பட்ட. பின்னர் 2 மில்லி மீட்டர் விட்டமே உள்ள துளை வழியாக செலுத்தக்கூடிய, மடித்து உள்ளே வைக்கக்கூடிய செயற்கை லென்ஸ் பொருத்தப்பட்டது.

இந்த முறையில் நோயாளி மருத்துவமணையில் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டிய நிலை தவிர்க்கப்பட்ட. மேலும் ஆபரேஷனின்போது தையல் போடுவதும் தவிர்க்கப்பட்டது. காயம் ஆறுவதற்கு அதிகபட்சம் ஒரு வார காலமே போதுமான. ஒரு வார காலத்திற்குள்ளாகவே நடைமுறை வாழ்ககைக்கு ஆபரேஷன் செய்து கொண்டவர் திரும்ப முடிகிறது.

கேட்ராக்ட்டினால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் பார்வை பெற முடியுமா?

புரை உரித்தல் எனப்படும் கேட்ராக்ட் ஆபரேஷன் மூலமாக மீண்டும் பார்வை பெற முடியும்.

கேட்ராக்ட் ஆபரேஷன் செய்த பிறகு எப்போது மீண்டும் பார்வை கிடைக்கும்?

கேட்ராக்ட் ஆபரேஷனப் பொறுத்தமட்டில் ஆபரேஷன் செய்தவுடனேயே மீண்டும் தெளிவான பார்வை கிடைக்கும்.

ஒருவர் கேட்ராக்ட் ஆபரேஷன் எப்போது செய்து கொள்ளலாம்?

கேட்ராக்ட் ஆபரேஷன் என்பது பொதுவாக நோயாளியின் விருப்பத்திற்கிணங்கவே செய்யப்படுகிறது. மருத்துவர்களும் நோயாளியின் கண் புரை முற்றிய பிறகு செய்து கொள்ளலாம் என்று அறிவுறுத்கிறார்கள். இங்கே நோயாளியின் விருப்பம் என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

உதாரணமாக நடைமுறை வாழ்க்கையில் அன்றாட வேலைகைளச் செய்வதற்கு கூட சிரமப்படுகின்ற வகையில் பார்வை பாதிக்கப்பட்டிருந்தால், அவர்கள் உடனடியாக இந்த ஆபரேஷனைச் செய்து கொள்ளலாம். இது குறித்து உங்கள் கண் மருத்துவரின் நிறைவான ஆலோசனையப் பெற்றுக்கொள்வதே மிகவும் சிறந்ததாகும்.

பஞ்சப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய‌ கண்மருத்துவ உதவியாளர் திரு ரவிச்சந்திரன் அவர்கள் அனுப்பிய சிலவகை கேட்ராக்ட் கண்களின் புகைப்படங்கள் இங்கே.
செய்திகள் உதவி:
தமிழில் ஒரு மருத்துவ வலைப்பூ!
( A medical blog in Tamil)

6 comments:

வடுவூர் குமார் said...

உங்களுக்கும் படங்கள் அனுப்பிய அவருக்கும் நன்றி.
இம்மாதிரி தொழில்/மருத்துவம் சார்ந்த பதிவுகள் அதிக அளவில் வரவேண்டும்

ambi said...

ரொம்ப எளிமையா அழகா இருக்கு உங்க விளக்கங்கள்.

ஒரு சந்தேகம்:

இள வயதில் காட்ராக்ட் சிகிச்சை எடுத்து கொண்ட ஒருவருக்கு இந்த குறைபாடு வயதான காலத்தில் மீண்டும் வர வாய்புள்ளதா?

ஏற்கனவே செயற்கை லென்ஸ் தானே பொருத்தி இருக்கார்? அதனால வரத்துக்கு சான்ஸே இல்லைன்னு நான் நினைக்கிறேன், இருந்தாலும் உங்க விளக்கம் உதவியா இருக்கும்.

புருனோ Bruno said...

//இள வயதில் காட்ராக்ட் சிகிச்சை எடுத்து கொண்ட ஒருவருக்கு இந்த குறைபாடு வயதான காலத்தில் மீண்டும் வர வாய்புள்ளதா? //

எந்த வயது என்றாலும் மறுமுறை வர வாய்ப்புள்ளது

//ஏற்கனவே செயற்கை லென்ஸ் தானே பொருத்தி இருக்கார்?//
அதில் ஒளி ஊடுறுவும் தன்மை குறைந்தால் வரும்

//அதனால வரத்துக்கு சான்ஸே இல்லைன்னு நான் நினைக்கிறேன், இருந்தாலும் உங்க விளக்கம் உதவியா இருக்கும்.//

இப்படி வருவதற்கு பெயர் "after cataract"

February 15, 2009 3:28 AM

புருனோ Bruno said...

//கேட்ராக்ட் என்பது லத்தீன் வார்த்தை. கேட்ராக்ட் என்றால் நீர்வீழ்ச்சி என்று அர்த்தம்.//

மருத்துவத்தில் catarrh என்ற ஒரு சொல் உண்டு. நீர் வழிவதை குறிக்க பயன் படுத்துவார்கள்

// இங்கு நீர்வீழ்ச்சியினூடே ஒரு பொருளைப் பார்க்கும்போது கண்ணுக்குப் புலப்படும் தோற்றத்தைப் போன்ற பார்வைக் கோளாறைக் குறிப்பிடுகிறது.//

நீர்வீழ்ச்சியானது ஒரு வென்நிற திரை போல் தெரிவது போல் இங்கும் கண்ணுள் ஒரு வெண்ணிற திரை தெரிவதால் இந்த பெயர் என்று நினைக்கிறேன்

Muruganandan M.K. said...

உங்கள் பதிவு கண்டு மிகவும் மகிழ்ந்தேன். மருத்துவம் சார்ந்த இத்தகைய பதிவுகள் மக்களுக்கு மிகவும் பயனளிக்கக் கூடியது.
தொடருங்கள் உங்கள் அரிய பணியை வாழ்த்துக்கள்.

சே.வேங்கடசுப்ரமணியன் said...

வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி..
வடுவூர் குமார்,
புருனோ ,
டொக்டர்.எம்.கே.முருகானந்தன் ,
அம்பி