15 January 2013

திரு.மனோகரன் என்.எம்.எஸ் பணிஓய்வு


                                பணி ஓய்வு திரு மனோகரன் மருத்துவமல்லா மேற்பார்வையாளர் (Manoharan NMS) அவர்கள் வயது முதிர்வின் காரணமாக 31.12.2012 அன்று தோகைமலை ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து பணிஓய்வு பெற்றார்.இனிய நண்பர்.பணி அல்லாது ஏனைய உறவுகளையும் நன்கு பேணி காப்பவர்.எங்களுக்கு அவர் ஒரு குட்டி விக்கிபீடியா,கூகிள் சர்ச் இஞ்சின், என கூறலாம்.சிமெண்ட் வாங்குவது முதல் சிம்கார்டு மாற்றுவது வரை எதைப்பற்றி வேண்டுமானாலும் அவரிடம் கேட்கலாம்.தெரிந்துவைத்திருப்பார் அல்லது எங்கு தொடர்பு கொண்டால் தெரியும் என சொல்லுவார்.பண்பாளர்.வயதுக்கு மீறிய பணிவு கொண்டவர்.ஓய்வு பெறும் மாதம் கூட டெங்கு களப்பணியினை சிறப்பாகச் செய்தவர்.அதிகாரிகளுக்கு இணக்கமானவர்.நம்பி பல காரியங்களை மருத்துவ அலுவலர்கள் இவரிடம் ஒப்படைப்பார்கள்.அதிர்ந்து பேசாதவர்.நம் தவறுகளைக் கூட மென்மையாக சுட்டிக் காட்டுபவர்.நெகிழ்வுத்தன்மை கொண்டவர்.யாருடனும் ஒத்துப் போய்விடுவார்.

                             நான்,கண்மருத்துவ உதவியாளர் செல்வமோகன்குமார் இவர் ஆகிய மூவரும் பெரும்பாலும் எந்த ஒரு நிகழ்வுக்கும் ஒன்றாக கலந்து கொள்ளுவோம்.அப்படி பழனி,ஏற்காடு ஆகிய பகுதிகளுக்கு இவருடன் சென்றுள்ளேன்.நல்ல இணை.வயது வித்தியாசம் தெரியாது.ஒன்றிவிடுவார்.நல்ல குடும்பம்.ஒரு மகன் ஒரு மகள்.இவ்வளவுகாலம் ஒரு நபர் அரசுப்பணியில் இருந்து பணியாற்றி ஓய்வு பெறுவதற்கு பின்னே அவரது மனைவிக்கு பெரும் பங்கு உண்டு.வேலைக்கு செல்லும் நாட்களில் கையில் சாப்படு கட்டிக் கொடுப்பது முதல் சரியான நேரத்தில் பஸ்பிடிப்பதுவரை துணைவியின் துணையின்றி ஆகாது.நானும் மோகனும் இவரும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மதிய உணவு ஒன்றாகத்தான் சாப்பிடுவோம்.இவரது வீட்டு உணவு சாத்வீகமாகவும் சுவையாகவும் இருக்கும்.உணவு குணத்தை நிர்ணயிக்கும் முக்கியக் காரணி  என்பது இவர் உணவை வைத்துத் தெரிந்து கொள்ளலாம்.மொத்தமாக இவரது பணிஓய்வு என்பது தனிப்பட்ட முறையில் எனக்கு பெரிய இழப்பு.நல்ல நண்பர்,நல்ல ஊழியர்,நல்லகணவர்,நல்ல தகப்பன்,நல்ல தாத்தா?..என பல பரிமாணங்களிலும் கிரேடு எடுத்தவர்.இவரைபற்றி நினைக்கும் போது  மகாகவி பாரதியின் கண்ணன் என் சேவகன் பாடல் எனக்கு நினைவுக்கு வரும்.

“நண்பனாய்,மந்திரியாய்,நல்லாசிரியனுமாய்,
பண்பிலே தெய்வமாய்ப் பார்வையிலே சேவகனாய்.
எங்கிருந்தோ வந்தான்..இடைச்சாதி என்று சொன்னான்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்!.

ஆம் எங்கள் நண்பரை,மந்திரியை,நல்லாசிரியரை….நாங்கள் மிஸ் பண்னுகிறோம்.






























1 comment:

Anonymous said...

best wishes keep it up