23 October 2010

இந்தியாவில் மலேரியா




இந்தியா குறித்து யார் வேண்டுமானாலும் எந்தக் கருத்தை வேண்டுமானாலும் எளிதாகச் சொல்லிவிட முடியும் என்பதற்கு தற்போது "லேன்செட்' என்ற பத்திரிகை வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை ஒரு உதாரணம்.
இந்தியாவில் மலேரியாவினால் இறப்பவர்களின் எண்ணிக்கை சுமார் 15,000 என்று உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரம் அளித்திருக்கும் நிலையில் அதை மறுப்பது போன்று "லேன்செட்' வெளியிட்டுள்ளது ஆய்வறிக்கை. இந்த மருத்துவ இதழின் ஆய்வுப்படி இந்தியாவில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் மலேரியா காய்ச்சலால் இறக்கிறார்கள். இந்த அறிக்கையை உலக சுகாதார நிறுவனம் மறுத்திருக்கிறது என்பது ஆறுதலான விஷயம்.
இதற்கான ஆதாரங்களை லேன்செட் அளிக்கவில்லை. ஆனால் இந்த மருத்துவ இதழ் இதுபற்றி மேலும் கூறுகையில், மலேரியா காய்ச்சலால் இறப்போர் எண்ணிக்கை 90 விழுக்காடு கிராமப்புறங்களில்தான் நடக்கிறது என்றும், இதில் 89 விழுக்காடு எந்த மருத்துவஆவணங்களிலும் பதிவு செய்யப்படாமலேயே போகிறது என்றும் சொல்கிறது. ஒரிசாவில்தான் அதிகபட்சமான மலேரியா மரணங்கள் நிகழ்ந்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது. இந்த ஆய்வு 2002-ம் ஆண்டு முதலாக 6,671 ஊர்கள் ஒவ்வொன்றிலும் 200 வீடுகளில் ஆய்வு நடத்தியதாகவும், இந்த ஆய்வை கனடா நாட்டின் டோரண்டோ பல்கலைக்கழகம் மற்றும் செயின்ட் மைக்கேல் உலக சுகாதார ஆய்வு மையமும் குழுவாக இணைந்து நடத்தியதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த மருத்துவ இதழ் அண்மையில், சில மாதங்களுக்கு முன்புதான், சூப்பர்-பக் என்கிற கிருமி இந்தியாவிலிருந்து பரவியதாக ஒரு கட்டுரையை வெளியிட்டது. இந்த சூப்பர்-பக் கிருமியைக் கண்டுபிடித்தவர்களில் முக்கிய நபராக தமிழகத்தைச் சேர்ந்த சென்னை பல்கலைக்கழக ஆய்வு மாணவர் இருந்ததால், அவர் இந்த அறிக்கையை மறுத்து பேட்டிகளும் வெளியானது. அந்த சர்ச்சை ஓய்ந்துபோன பின்னர் தற்போது மலேரியா பிரச்னையை கையில் எடுத்துக் கொண்டுள்ளது லேன்செட்.
லேன்செட் போன்று ஒரு மருத்துவ இதழ் இந்தியாவிலிருந்து அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா சென்று அங்குள்ள நோய்கள் குறித்து ஆய்வு நடத்தி, இப்படியான அறிக்கையை தன்னிச்சையாக வெளியிட முடியுமா என்று யோசித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. நிச்சயமாக முடியாது.
இன்னொரு நாட்டில் படிப்பதற்காகவும் சுற்றுலாவுக்காகவும் சென்றாலும்கூட ஆயிரம் கேள்விகளுக்குப் பதில் சொல்லியாக வேண்டும். அப்படியிருக்க, அந்த நாட்டு மக்களின் சுகாதாரம், நோய்கள் குறித்த ஆய்வுக்காக செல்கிறோம் என்றால், ஒப்புக் கொள்ளவே மாட்டார்கள். அப்படியே ஒப்புக்கொண்டாலும் அந்த ஆய்வை கூட்டுமுயற்சி என்ற அளவில் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு, ஆய்வின் முடிவுகளை வெளியிடுவது, அல்லது நிறுத்தி வைக்கும் உரிமை தங்களுக்கு உண்டு என்று ஒப்பந்தத்தில் ஒரு விதியாகச் சேர்த்துத்தான் அனுமதிப்பார்கள்.
ஆனால் இந்தியாவில் யார் வேண்டுமானாலும் வந்து என்ன ஆய்வுகள் வேண்டுமானாலும் செய்ய முடிகிறது. அதைவிட ஒருபடி மேலே போய், எந்த அறிக்கையையும் வெளியிட முடிகிறது. இதைத் தடுக்க எத்தகைய நடவடிக்கையையும் அரசு மேற்கொள்வதில்லை என்பதுதான் வேதனையான விஷயம்.
எந்த ஆதாரமும் இல்லாமல் இத்தகைய தகவல்களை ஆய்வுக் கட்டுரை என்ற பெயரில் வெளியிடும் இதழுக்கு உலக சுகாதார நிறுவனம் மறுப்பு தெரிவிக்கின்றபோது, இந்திய அரசு ஏன் மானநஷ்ட வழக்கு தொடுக்கக்கூடாது?
இந்தியாவின் மக்கள்தொகையும் மருத்துவ வசதியைத் தேடிச் செல்வோரின் எண்ணிக்கையும் பல கோடிகளாக இருப்பதால், மிகப் பெரும் மருத்துவச் சந்தையாக இந்தியா திகழ்கிறது. வெளிநாட்டவர் யார் சொன்னாலும் அதை உண்மை என்று நம்புகின்ற இயல்பினர் இந்தியர் என்பதால் இத்தகைய செய்திகளை உண்மையைப் போலவே சொல்லி, இந்தியர்களை பீதிக்குள்ளாக்குவதும் அதற்கான மருந்துகளை விற்பனைக்குத் தள்ளிவிடுவதும்தான் இத்தகைய ஆய்வுகளால் பிற நாடுகளுக்குக் கிடைக்கும் பொதுப்பலன்.
இந்தியாவில் நிலவும் நோய்கள் குறித்து ஆய்வுகள் நடத்திட வேண்டுமானால் அதை எந்த அமைப்பு செய்யலாம் என்பதையும், அந்தக் கணக்கெடுப்பு முறைப்படி நடத்தப்பட்டதா, ஆய்வுகள் உண்மையானவையா என்பதையும் இந்திய மருத்துவக் கழகம் தீர்மானித்து, அதன் பிறகு இந்திய அரசு அவை வெளியாகலாம் என்று அனுமதி கொடுக்கும் நடைமுறைதான் இந்தியாவுக்குப் பெருமை சேர்க்கும்.
அதேபோன்று புதிய மருந்துகளை நோயாளிக்குக் கொடுத்து சோதனை நடத்தும்போதும், அதைப் பற்றி நோயாளிக்கு அறிவிப்பதும் மற்றும் அவர்களுக்கு ஏற்படும் பின்விளைவுகளுக்காக உடனடி சிகிச்சை அளிப்பதும், பாதகமான விளைவுகள் ஏற்பட்டால் இழப்பீட்டின் அளவு ஆகிய அனைத்தையும் தீர்மானித்த பிறகே அத்தகைய மருத்துவ அமைப்புகள் இந்தியாவுக்குள் ஆய்வு நடத்த அனுமதிக்க வேண்டும்.
ஆய்வுகள் என்ற பெயரில், பெயரும் புகழும் பெற்ற மருத்துவ இதழ்களே இத்தகைய ஆதாரமற்ற செயல்களில் இறங்குவார்கள் என்றால், அதை இனியும் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பது இந்தியாவுக்கு நல்லது அல்ல.
பொய்யுடை ஒருவன் சொல்வன்மையினால் மெய்போலும்மே மெய்போலும்மே
மெய்யுடை ஒருவன் சொலமாட்டாமையால் பொய்போலும்மே பொய்போலும்மே
லேன்செட் முதல்ரகம், இந்தியா இரண்டாவது ரகம்.

நன்றி தினமணி தலையங்கம் 23.10.2010

1 comment:

புருனோ Bruno said...

//இந்தியாவில் நிலவும் நோய்கள் குறித்து ஆய்வுகள் நடத்திட வேண்டுமானால் அதை எந்த அமைப்பு செய்யலாம் என்பதையும், அந்தக் கணக்கெடுப்பு முறைப்படி நடத்தப்பட்டதா, ஆய்வுகள் உண்மையானவையா என்பதையும் இந்திய மருத்துவக் கழகம் தீர்மானித்து, அதன் பிறகு இந்திய அரசு அவை வெளியாகலாம் என்று அனுமதி கொடுக்கும் நடைமுறைதான் இந்தியாவுக்குப் பெருமை சேர்க்கும்.//

அதாவது ஆய்வுக்கு சென்சார்

என்ன கொடுமை சார் இது

தினமணி ஏன் இவ்வளவு தரம் தாழ்ந்து யோசிக்கிறது

தினமணியில் வெளியாகும் மருத்துவத்துறை குறித்த அனைத்து தலையங்கங்களுமே மிகவும் முட்டாள்தனமாகவே உள்ளது

1. கட்டாய கிராமப்புற சேவையை வரவேற்றார்கள்

2. அரை குறை எம்.பி.பி.எஸ்சை வரவேற்றார்கள்

3. பொது நுழைவு தேர்வை வரவேற்கிறார்கள்

இப்பொழுது இது