15 November 2008

நரம்பு சிலந்தி நோயை ஒழித்தது எப்படி

குறிப்பு:இந்தப் பதிவு மரு.ஜா.மரியானோ அண்டோ புருனோ மஸ்கரனாஸ் அவர்களது வலத்தளத்திலிருந்து எடுத்து பயன்படுத்தப்படுகிறது.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடலினுள் ஒரு புழு இருக்கும்.

இந்த புழுவை எப்படி வெளியில் எடுப்பது. அதை ஒரு தீக்குச்சியில் (அல்லது ஏதாவது குச்சியில்) சுற்றிக்கொண்டு தினமும் சிறிது சிறிதாக எடுக்க வேண்டும்
ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் ”படி கிணறுகள்” (step wells) அதிகம் உண்டு. நம் ஊர் போல் கயிறு வாளி எல்லாம் தேவையில்லாமல் கிணற்றில் நேரடியாக இறங்கி நீரை எடுக்க வேண்டியது தான்.

இங்கு தான் பிரச்சனையே ஆரம்பம் !!

இந்த புழுவினால் பாதிக்கப்பட்ட ஒருவர் கிணற்றினுள் இறங்குகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். உடனே அவரது காலில் இருக்கும் அந்த புழு சிறிது எட்டிப்பார்த்து நீரினுள் லார்வாக்களை விட்டு விடுகிறது. (மற்ற நேரங்களில் லார்வாக்களை வெளியிடாது. மற்ற நேரங்களில் வெளியிட்டால் லார்வாக்களால் பிழைக்க முடியாது என்பதால் அதனால் பலனில்லை என்பதை தெரிந்து வைத்திருக்கும் புத்திசாலி புழு அது !!)

அந்த லார்வாக்கள் (இவைகளை L1 லார்வாக்கள் என்று அழைக்கிறார்கள்) சைக்லாப்ஸ் (cyclops) என்னும் சிறிய உயிரினங்களுக்குள் புகுந்து ஒரு 15 நாட்கள் உள்ளே இருந்து வளர்ச்சி பெறுகின்றன. (வளர்ச்சி பெற்ற பின் அவை L3 லார்வாக்கள் ஆகிவிடுகின்றன)

இப்படி இருக்கையில் அதே நீர்நிலைக்கு ஒருவர் வருகிறார். அங்கிருந்து நீரை எடுத்து செல்கிறார். அதை காய்ச்சாமல், வடிகட்டாமல் அப்படியே குடிக்கிறார். சைக்ளாப்ஸும் (அதனுள் இருக்கும் லார்வாவும்) அவரின் வயிற்றிற்கும் செல்கின்றன. சைக்லாப்ஸ் ஜீரணமாகி விடுகிறது. அதனுள் இருக்கும் L3 லார்வா வெளிவருகிறது இரைப்பையின் சுவற்றை துளைத்து சென்று உடலினுள் புகுந்து தோலுக்கு அடியில் வந்து விடுகிறது

9 முதல் 12 மாதங்களில் அவை புழுக்களாகிவிடுகின்றன. அதன் பிறகு இந்த நபர் நீரில் காலை வைத்தால் உடன் L1 லார்வாக்களை வெளியிட்டு, அவை L3
லார்வாக்கள் ஆகி, அந்த நீரை ஒருவர் வடிகட்டாமல் குடித்து அவருடம்பில் மீண்டும் புழுவாக வேண்டியது தான்.

இப்பொழுது விஷயத்திற்கு வருவோம். ஒரு காலத்தில் தமிழகத்தில் பரவலாக இருந்த இந்த நோய் இன்று கிடையவே கிடையாது. இதிலென்ன, ஒரு காலத்தில் பரவலாக இருந்த பெரியம்மையும், போலியோவும் கூடத்தான் இன்று கிடையாது. டெட்டெனஸ், கக்குவான் இருமல் டிப்தீரியா போன்றவையும் வெகுவாக குறைந்து விட்டன என்று நீங்கள் கூறலாம்.

அந்த நோய்களை எல்லாம் நாம் தடுப்பூசி மூலமே கட்டுப்படுத்தியுள்ளோம். ஆனால் நரம்பு சிலந்தியை கட்டுப்படுத்தி பின்னர் காணாமல் ஆக்கியது தடுப்பூசி மூலம் அல்ல. பொது சுகாதார நடவடிக்கைகள் மூலமே

நோயை தடுக்கவோ அல்லது குணப்படுத்தவோ ஊசியோ, மாத்திரையோ இல்லாமல் மக்களின் நடத்தை மாற்றம் மூலம் மட்டுமே ”அழிக்க”ப்பட்ட ஒரு நோய் நரம்பு சிலந்திதான்..

ஒரு நோயை தடுக்க அறுவை சிகிச்சை / மாத்திரை/ ஊசிகளுடன் வாழ்க்கை முறை மாற்றமும் முக்கியம், என்ற நிலையில் இருந்து வாழ்க்கை முறை மாற்றமே முதல் வைத்தியம், அறுவை சிகிச்சையும் மருந்தும் ஊசியும் இரண்டாம் பட்சம் தான் என்ற அளவிற்கு (From "Life Style Modification as a supplement to drugs and surgery" to "Life Style Modification as the Main Mode of Treatment and Drugs / Surgery only in rare cases) ஒரு சிந்தனை மாற்றத்தை அளித்த நிகழ்வு நரம்பு சிலந்தி ஒழிப்பு திட்டம் தான்1981 முதல் 1990 பத்தாண்டுகளை ஐ.நா சபை சர்வதேச குடிநீர் வழங்குதல் மற்றும் சுகாதார பத்தாண்டு (International Drinking Water Supply and Sanitation Decade ) என்று வரையறுத்தவுடன் ஏற்கனவே பெரியம்மையை “ஒழித்தி”ருந்த அனுபவமும் உற்சாகமும் கை கொடுக்க நரம்பு சிலந்தியை கட்டுப்படுத்த கிளம்பிவிட்டனர்

அப்பொழுது இந்தியாவில் 7 மாநிலங்களில் இந்த நோய் அதிக அளவில் இருந்தது

ராஜஸ்தான்

குஜராத்

ஆந்திர பிரதேசம்

மத்திய பிரதேசம்

மகாராஷ்ட்ரா

கர்நாடகா

தமிழ்நாடு

இந்தியாவிலும் இந்த திட்டம் 1980 முதல் செயல்படுத்தப்பட்டது. கிராமம் கிராமமாக இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கணக்கெடுக்கப்பட்டார்கள்.
இந்தியாவில் 1983ஆம் ஆண்டு இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44819
1984ல் ஒரு மாநிலத்திலிருந்து இந்த நோய் முற்றிலும் மறைந்திருந்தது
1984ல் 89 மாவட்டங்களில் 12840 கிராமங்களில் 39,792 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்
1986ல் உலக சுகாதார சபை நரம்பு சிலந்தியை ஒழிப்பது என்று தீர்மானம் இயற்றிய போது இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22610வாக குறைந்திருந்த்து.

1987ல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17031.

1988ல் அதில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் குணமடைந்திருந்தனர். அப்பொழுது கூட ஒரே ஒரு மாநிலத்தில் மட்டும் இந்த நோய் முற்றிலும் மறைந்திருந்தது

பொது சுகாதாரத்தில் முதல் இடத்தில் இருக்கும் தமிழகத்திலிருந்து நாலே வருடங்களில் நாம் சாதித்ததை ராஜஸ்தானால் 16 வருடங்கள் கழித்து தான் சாதிக்க முடிந்தது


1996ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநில ஜோத்பூர் மாவட்டத்திலிருந்து 3 கிராமங்களில் 9 பேர்களிட தான் நரம்பு சிலந்தி கடைசியாக காணப்பட்டது

1999 வரை ஏழு முறை இந்த திட்டம் ஆய்வு செய்யப்பட்டது. ஏப்ரல் 1999ல் கடைசி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது

உலக சுகாதார நிறுவனத்தில் நிபுணர் குழு 1999 நவம்பர் 9 முதல் 25 வரை ஆய்வு செய்தனர்
அதன் பின்னர் 2000 இந்தியாவில் இந்த நோய் இல்லை (eliminated) என்ற சான்று வழங்கப்பட்டது
2001 பிப்ரவரி 15ஆம் தேதி இந்திய நரம்பு சிலந்தியற்ற நாடு என்று அறிவிக்கப்பட்டது (free of guinea worm)
முதன் முதலாக இந்த சான்றை பெற்ற ஆசிய நாடு நாம் தான்
குடிக்கும் நீரில் நரம்பு சிலந்தியின் L3 லார்வா, இரைப்பையினுள் செல்லுதல்

காலில் இருக்கும் புழு நீரினுள் L1 லார்வாக்களை வெளியிடுதல்
ஆக இவை இரண்டையும் தடுத்தாலே நரம்பு சிலந்தி புழுவால பரவ முடியாது. அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று பார்த்தால்
குடிக்கும் நீரில் நரம்பு சிலந்தியின் L3 லார்வா, இரைப்பையினுள் செல்லுவதை தடுத்தல்
ஆழ்துளை கிணறுகளை அமைத்தல்
கைபம்புகளை அமைத்தல்
தண்ணீரை காய்ச்சுதல்
வடிகட்டிய தண்ணீரை மட்டுமே குடித்தல்
காலில் இருக்கும் புழு நீரினுள் L1 லார்வாக்களை வெளியிடுவதை தடுத்தல்
படி கிணறுகளை மூடி ஆழ்துளை கிணறுகள் அமைத்தல் அவ்வளவு தான்
நன்றி: மரு.புருனோ (www.payanangal.in)
http://www.payanangal.in/2008/10/18-how-guinea-worm-was-eradicated-in.html