பொது சுகாதாரத்துறையின் தலைமை அலுவலகத்திற்காகவும் நீரினால் பரவும் நோய்கள் மற்றும் நோய்களை கண்டறியவும் தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும் சென்னையில் உள்ள மருத்துவத்துறை இயக்குனர் அலுவலக வளாகத்தில் புதிதாக ரூ.2.75 கோடி மதிப்பில் பிரமாண்டமான கட்டிடம் கட்ட தமிழக அரசு முடிவெடுத்தது.
பொது சுகாதாரத்துறையின் தலைமை அலுவலகத்திற்காக கட்டப்படும், இந்த கட்டிடம் நவீன வசதிகளுடன், பகல் பொழுதில் மின்சார சிக்கனத்திற்காக அலுவலகத்திற்குள் சூரியஒளி வரும் வகையில் வடிவமைக்கப்பட்டு கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதி திட்டத்தின் கீழ் ஆறு மாடி கட்டிடம் கட்ட பொது சுகாதாரத்துறை முடிவெடுத்துள்ளது.
இதுவரை பொது சுகாதாரத்துறைக்கு என்று தனியாக கட்டிடம் இல்லாத நிலை இருந்துவந்தது. பொது சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் பல்வேறு பிரிவுகள் தற்போது மருத்துவத்துறை இயக்குனர் அலுவலக வளாகத்தில் உள்ள பல்வேறு கட்டிடங்களில் செயல்பட்டு வருகிறது.
புதிய கட்டிடம் கட்டிமுடித்த உடன், அனைத்து அலுவலகங்களும் ஒருங்கிணைத்து புதிய கட்டிடத்தில் செயல்படும் வகையில் மாற்றப்பட உள்ளது. வரும் நிதியாண்டில் முதல் தளம் கட்டும் பணி தொடங்க உள்ளது.பொது சுகாதாரத்துறையில் மட்டும் 40 ஆயிரம் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் பூமி பூஜை நேற்று டிச.9.தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவ பணிகள் இயக்குநரக வளாகத்தில் நடந்தது. தமிழக பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் இரா.தி.பொற்கைபாண்டியன், கூடுதல் இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி ஆகியோர் கலந்து கொண்டு அடிகல் நாட்டி பூமி பூஜையை தொடங்கி வைத்தனர். விழாவில் பொது சுகாதாரத்துறை இணை இயக்குநர்கள், துணை இயக்குனர்கள் உள்பட சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
படம் உதவி Jagadeswaren Murugesan
( குறிப்பு: பொது சுகாதாரத்துறை தமிழக அரசுத்துறைகளிலேயே மிகப்பழமை வாய்ந்த துறையாகும். 1924–ம் ஆண்டு முதல் இயங்கிவருகிறது. தென்னிந்தியாவில் உள்ள நான்கு மாநிலங்களுக்கும் சேர்த்து ஒரே இயக்குநராக டாக்டர். கிங் செயல்பட்டுவந்தார். இவரது களப்பணி அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக அந்நாளில் கருதப்பட்டது.துறையின் வரலாறு தொகுக்கப் பட வேண்டியது அவசியம்.)
No comments:
Post a Comment