தமிழக அரசு மருத்துவமனைகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் உயிர் மருத்துவக் கழிவு மேலாண்மை திட்டம் அமல் படுத்தப்பட்டு வருகிறது.
ஆரம்ப சுகாதார நிலையங்களில் உருவாகும் மருத்துவக் கழிவுகள் குப்பைகளில் கொட்டப்பட்டு வந்தன. இதனால், பல்வேறு நோய் தொற்றுக்கள் மற்றும் சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டன.
இந்த பாதிப்புகளைத் தவிர்க்கும் வகையில், மருத்துவக் கழிவு மேலாண்மை திட்டம் என்ற புதிய முறை தற்போது அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின்படி, கழிவுகளை சேகரிப்பதற்காக ஒவ்வொரு பிரிவுக்கும் சிவப்பு, மஞ்சள், நீலம், கருப்பு மற்றும் பச்சை நிறங்களில் கூடைகள் வழங்கப்படுகின்றன.
இதில், சிவப்புக் கூடையில் மருந்து, ரத்தம், குளுக்கோஸ், பிளாஸ்டிக் குழல் போன்ற கழிவுகளைச் சேகரிக்க வேண்டும்.
மஞ்சள் நிறக் கூடையில் உயிர் மருத்துவக் கழிவுகளான, உடல் உறுப்புக்களின் சிதைவுகள், நஞ்சுக்கொடி, உடலுறுப்புப் பகுதிகள் ஆகியவற்றைச் சேகரிக்க வேண்டும்.
நீல நிறக் கூடையில், கண்ணாடி மருந்து குப்பிகள், உடைந்த கண்ணாடி துண்டுகள், கண்ணாடி வில்லைகள் ஆகியவற்றைச் சேகரிக்க வேண்டும்.
கருப்பு நிறக் கூடையில் காலாவதியான மருந்துகள், எக்ஸ் கதிர் இயக்க கழிவுகளைச் சேகரிக்க வேண்டும்.
(படத்தை கிளிக் செய்து பெரிதாக்கிப் படிக்கலாம்)
பச்சை நிறக் கூடையில் பொதுவான கழிவுகளான உணவுக் கழிவுகள், பிளாஸ்டிக் உறைகள், மாவுகட்டுக் கழிவுகள் ஆகியவற்றைச் சேகரிக்க வேண்டும்.
இதற்காக மருத்துவமனைகளின் அனைத்துப் பிரிவுகளுக்கும் பல வண்ணங்களில் கூடைகள் வழங்கப்பட்டுள்ளன.
இத்தகைய சேகரிக்கப்பட்ட கழிவுப்பொருட்களை அதற்கான பிரத்யேக வாகனம் மூலம் அரசால் அனுமதிக்கப்பட்ட தனியார் நிறுவன வாகனம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து எடுத்துச் சென்று பாதுகாப்பாக அழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.