சுகாதாரத் துறைக்கு ரூ. 276 கோடியில் புதிய கட்டடங்கள்: முதல்வர் திறந்து வைத்தார்
தமிழகத்தில் ரூ. 276.38 கோடியில் சுகாதாரத் துறை சார்ந்த பல்வேறு கட்டடங்களை முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை திறந்து வைத்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்த கட்டடங்களை காணொலிக் காட்சியின் மூலம் அவர் திறந்து வைத்தார்.
சென்னையில்...சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ. 3.77 கோடி மதிப்பில் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை, நரம்பியல் சிறுநீரகவியல் ஆகிய சிகிச்சைப் பிரிவுகள், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள நுண்ணுயிரியல் ஆய்வகக் கட்டடம், அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ. 6. 37 கோடியில் கட்டடம், எழும்பூர் மகப்பேறு, குழந்தைகள் நல மருத்துவமனை செவிலியர்கள், செவிலியர்கள் மாணவர்களுக்கு ரூ. 2.70 கோடியில் விடுதிக் கட்டடங்கள், கிண்டி கிங் நோய் தடுப்பு மருந்து, ஆராய்ச்சி நிலையத்தில் ரூ. 1.2 கோடியில் நோய் எதிர்ப்புத் திறன் கண்டறியும் ஆய்வகக் கட்டடம் ஆகியவற்றையும் முதல்வர் திறந்து வைத்தார்.
புற நோயாளிகள் பிரிவு: பெரியகுளம், ஆண்டிபட்டி, செஞ்சி, திருச்செந்தூர், பொள்ளாச்சி, பெருந்துறை, கோபிசெட்டிபாளையம், கும்பகோணம், பட்டுக்கோட்டை, திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனைகள், ஈரோடு, பெரம்பலூர், கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் ரூ. 13.50 கோடியில் கட்டப்பட்டுள்ள புறநோயாளிகள் பிரிவு, அறுவைச் சிகிச்சை அரங்கம், அறுவைச் சிகிச்சைக்குப் பிறகான கவனிப்பு வார்டு, பச்சிளங் குழந்தைகள் பராமரிப்பு பிரிவு, மருந்துப் பொருள்கள் கிடங்கு, அவசர கால தாய் சேய் தீவிர சிகிச்சைப் பிரிவு, நவீன சமையல் கூடம், யோகா மற்றும் இயற்கை மருத்துவ மருந்தகம், அடிப்படை கண் சிகிச்சைப் பிரிவு, ஆண்கள் மற்றும் பெண்கள் சிகிச்சைப் பிரிவு, மகப்பேறு பிரிவு, குழந்தைகள் பிரிவு ஆகியவற்றுக்கான கட்டடங்களை முதல்வர் திறந்து வைத்தார்.
ஹோமியோபதி: மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் உள்ள அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் ரூ. 1.49 கோடியில் ஆண்கள் விடுதி, நவீன சமையல் கூடம்,
பார்வையாளர்கள் காத்திருப்புக் கூடம் ஆகியவை திறக்கப்பட்டன.
பொது சுகாதாரம், ஊரக நலப்பணிகள்: பொது சுகாதார இயக்ககத்துக்கு ரூ. 9 கோடியில் அலுவலகக் கட்டடம், சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் கட்டப்பட்டுள்ள ரூ. 26.69 கோடியில் அவசர கால மேலாண்மை கட்டுப்பாட்டு மையம், மருத்துவமனை நிர்வாகம், சுகாதார அமைப்புகள் பயிற்சி நிலையகக் கட்டடம் ஆகியவையும் திறக்கப்பட்டுள்ளது.
இது தவிர நீலகிரி, சேலம், தஞ்சாவூர், கரூர், மதுரை, நாகப்பட்டினம், தருமபுரி, விழுப்புரம், கன்னியாகுமரி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ரூ. 15.25 கோடியில் 15 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடங்கள், 22 ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரூ. 3.64 கோடியில் கட்டப்பட்டுள்ள செவிலியர் குடியிருப்புகள் உள்ளிட்ட கட்டடங்களை முதல்வர் திறந்து வைத்தார்.
அடிக்கல்: சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ரூ. 75 கோடியில் அடுக்குமாடி கட்டடம், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில்
ரூ. 58.65 கோடி செலவில் புறநோயாளிகள், முடநீக்கியல் பிரிவுக்கான கட்டடம், சிறுநீரகவியல் அறுவைச் சிகிச்சை, சிறுநீரகவியல் பிரிவுகளுக்கு ரூ. 19.65 கோடியில் கட்டடம், சென்னை மருத்துவக் கல்லூரி முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு ரூ. 6 கோடியில் விடுதிக் கட்டடம் என மொத்தம் ரூ. 159.30 கோடியில் புதிய கட்டடங்கள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
புதிய கருவிகள்: சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் ரூ.9.59 கோடியில் நிறுவப்பட்டுள்ள "சி.டி. ஸ்டிமுலேட்டர்', டிஜிட்டல் எக்ஸ்ரே, புறநாடித் துடிப்புக் கருவி, மிகையளவு அண்மைக் கதிர்வீச்சுப் பிரிவு ஆகிய மருத்துவ உபகரணங்களின் சேவையையும் முதல்வர் தொடக்கி வைத்தார்.
ரூ. 200 கோடியில் புதிய மருத்துவக் கல்லூரி, ரூ. 107.48 கோடியில் புதிய கட்டடங்கள், ரூ. 9.59 கோடியில் புதிய உபகரணங்கள், ரூ. 159.30 கோடியில் புதிய கட்டடங்களுக்கான அடிக்கல் என முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தும், அடிக்கல் நாட்டிய மொத்த திட்டங்களின் மதிப்பு ரூ.276.38 கோடியாகும்.
போதை மறுவாழ்வு மையம்!
தமிழக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ரூ. 6.52 கோடியில் போதை மறுவாழ்வு மையங்களை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
விழுப்புரம், தருமபுரி, தேனி ஆகிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் போதை மறுவாழ்வு மையங்கள் உள்ளிட்ட கட்டடங்கள் திறக்கப்பட்டுள்ளன. விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ. 6.02 கோடியில் அவசர கால தாய் சேய் தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டடம், போதை மறுவாழ்வு மையம், தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ. 1 கோடி செலவில் போதை மறுவாழ்வு மையம், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ. 1.50 கோடியில் போதை மறுவாழ்வு மையம், வைரஸ் ஆராய்ச்சி பரிசோதனைக் கூடம் ஆகியவையும் திறக்கப்பட்டுள்ளன. இந்த போதை மறுவாழ்வு மையங்கள் அனைத்தும் மருத்துவக் கல்லூரியின் உளவியல் சிகிச்சைத் துறையின் கீழ் செயல்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.