09 January 2010

அஞ்சலி


எங்களுடன் பணியாற்றும் காவல்காரன்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தைச் சார்ந்த கீழவெளியூர் துணை சுகாதார நிலைய கிராம சுகாதார செவிலி திருமதி..பாப்பாத்தி அவரகளின் புதல்வி செல்வி விஷ்ணுப்பிரியா 06.01.2010 அன்று ஊத்தங்கரையில் சாலை விபத்தில் அகால மரணமடைந்தார்.
+2 படித்துவந்தவர் பள்ளிக்குச் செல்ல பேருந்தில் ஏறும் போது இடறி விழுந்து தலையில் பலமான அடிபட்டு மூளை செயலிழந்து போனது.
பாப்பாத்தி அவர்கள் ஊத்தங்கரையில் ஊட்டச்சத்து பணியாளராகப் பணிபுரிந்து கிராம சுகாதார செவிலியாக கரூர் மாவட்டம் காவல்காரன் பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பணிநியமனம் பெற்றவர்.குடும்பம் ஊத்தங்கரைக்கு அருகில் கொமாரப்பட்டி எனும் சிறு கிராமம்.குடும்பத்தை அங்கேயே விட்டு விட்டு இவர்மட்டும் கீழவெளியூரில் தங்கி பணிபுரிந்து வந்தார்.புத்தாண்டு தினத்தன்று கூட ஊருக்குச் சென்று குடும்பத்தைப் பார்க்க,அவர்களுடன் இருக்க விடுப்பு எடுக்க முடியாமல் பணியாற்றினார்.தகவல் தெரிந்ததும் வட்டார அளவில் 32 ஊழியர்கள் இரண்டு தனியார் வாகனத்தில் சேலம் சென்று அங்கு அரசு மருத்துவமணை பிணவரையில் கிடத்தப்பட்டிருந்த வேரோடு பிடுங்கப்பட்ட இளம் கொடியைப்போல கிடந்த அந்த செல்வத்தை பார்த்து பார்த்து க‌ண்கல‌ங்கினோம்.விரைவாகபோஸ்ட்மார்டம் செய்யஅங்கிருந்த கண்மருத்துவ உதவியாளர்கள் மிகுந்த உதவிபுரிந்தனர்.
போஸ்ட்மார்டத்திற்கு முன்னதாக சடலத்தைப்பார்க்க அனுமதிக்கும் படி நான் அங்கிருந்த பொறுப்பு பெண்மருத்துவ அலுவலரைப் பார்த்து அறிமுகப்படுத்திக்கொண்டு கேட்டேன்.எங்களது உணர்வைப்புரிந்து கொண்டு அனுமதி வழங்கினார்.பிறகு அங்கிருந்து அரூர் வழியாக ஊத்தங்கரை செல்லும் வழியில் அரூரிலிருந்து 17 கி.மீ தூரத்தில் உள்ள"கொமாரபட்டி" கிராமத்திற்குச் சென்று சகோதரி பாப்பாத்திக்கு சொல்லமுடியாதஆறுதலைச் சொல்லி துக்கத்தில் பங்கெடுத்துக் கொண்டோம்.
அவருக்கு ஒரே பெண்.இரண்டு ஆண்மக்கள்.தாயை பிரிந்து இருந்த குழந்தைகளுக்கு தாயாகவும் இருந்து பார்த்துக் கொண்ட பாப்பாதியின் கணவர் திரு.ராஜாவின் கண்ணீர் எல்லோரையும் கலங்கடித்தது.
இந்த நிகழ்வுக்கு முன்னர் 04.01.2010 அன்று தோகைமலை வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற புத்தாண்டு வாழ்த்துப் பரிமாறல் நிகழ்ச்சியில் பேசிய பாப்பத்தியின் பேச்சு எல்லோரையும் கரைத்தது.
"இந்த வேலைக்கு வர்ரத்துக்கு முன்னாடி த்துணவுல புள்ளைகள பாத்துகிட்டிருந்தேன். இந்த ஊருக்கு வரும் போது எதுவுமே தெரியாமத்தான் வந்தேன்.வந்த பிறவு கொஞ்ச கொஞ்சமா எல்லாத்தையும் கத்துக்கிட்டேன்.இப்போ நல்லா தனியாவே டெலிவெரி பாக்குறேன்.அப்புடி நானே பாக்கும் போதுதான் "உயிரோட மதிப்பு என்னான்னு எனக்கு தெரிஞ்சுது"‍ இது அவரது பேச்சின் ஒரு பகுதி.
இந்த மாதிரியான‌ இழப்பு யாருக்கும் ஏற்படக்கூடாது. இந்தச் சகோதரி இனியாவது குடும்பத்துடன் வாழ்வதற்கு ஏற்றவாறு அரூர் அல்லது ஊத்தங்கரைப் பகுதியில் இவருக்கு மாறுதல் வழங்கி உதவலாம்.வந்தியத்தேவன் போன்ற நல்லுள்ளம் கொண்ட நண்பர்கள் இயக்குனரின் பார்வைக்கு இச் செய்தியை கொண்டு சென்று இவரது மாறுதலுக்கு உதவலாம்.

புத்தாண்டு வாழ்த்துக்கள்










தோகைமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் 04.01.2010 அன்று புத்தாண்டு வாழ்த்துக்கள் பரிமாறும் நிகழ்வு நடந்தேறியது.வட்டார அளவிலான அனைத்து மருத்துவர்கள், மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.விழாவின் போது வட்டார மருத்துவ அலுவலர் அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.ஊழியர்கள் சார்பாக அனைத்து மருத்துவர்களுக்கும் ஒரு சிறு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.விழாவிலிருந்து சில காட்சிகள்.

02 January 2010

போனஸ்


2008-2009ம் ஆண்டிற்கு 'சி' மற்றும் 'டி' பிரிவு அரசு அலுவலர்கள் அனைவருக்கும் 30 நாட்கள் ஊதியத்திற்கு இணையாக சென்ற ஆண்டு இருந்த உச்ச வரம்பான ரூ. 2500யுடன் ரூ. 500 உயர்வு அளித்து ரூ. 3,000 உச்சவரம்பிற்கு உட்பட்டு போனஸ் வழங்கிடவும்,

'ஏ' மற்றும் 'பி' தொகுதியைச் சார்ந்த அலுவலர்கள் அனைவருக்கும் ரூ. 1,000 சிறப்பு போனஸ் வழங்கிடவும், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ரூ. 500 பொங்கல் பரிசு வழங்கிடவும் முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாக பணிபுரிந்த, மாத அடிப்படையில் நிலையான ஊதியம் பெற்று வந்த முழு நேர மற்றும் பகுதி நேரப்பணியாளர்கள், தொகுப்பூதியம் பெற்று வந்த பணியாளர்கள், தொகுப்பூதியம், சிறப்பு கால முறை ஊதியம் பெற்று வந்த சத்துணவுத் திட்டப்பணியாளர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்கள்,

குறு அங்கன்வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்கள், ஊரகவளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறையில் பணிபுரிந்து வரும் சிறப்பு கால முறை ஊதிய விகிதத்தில் உள்ள பஞ்சாயத்து உதவியாளர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள், ஒப்பந்த அடிப்படையிலான தற்காலிக உதவியாளர்கள், தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் மற்றும் ஒரு பகுதி தினக்கூலிகளாக பணியாற்றி பின்னர் தொடர்ந்து நிரந்தர பணியாளர்களாக பணியாற்றியவர்களுக்கும் சிறப்பு மிகை ஊதியம் ரூ. 1000 வழங்கப்படும்.

உள்ளாட்சி நிறுவனங்கள் மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள், பல்கலைக்கழக மானியக்குழு, அனைத்திந்திய தொழில் நுட்பக்கல்விக் குழு, இந்திய வோளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் சம்பள விகிதம் மற்றும் அனைத்திந்தியப் பணி விதிமுறைகளின் கீழ் வரும் அனைவருக்கும் இந்த போனஸ் வழங்கப்படும்.


Pongal Bonus 2010 height="500" width="100%" > value="http://d1.scribdassets.com/ScribdViewer.swf?document_id=24725783&access_key=key-15mouiye4wjw8dijroky&page=1&version=1&viewMode=list">