11 December 2011

2004க்கு பின் போலியோ பாதிப்பு இல்லை


தமிழகத்தில் இடம் பெயர்ந்து வாழ்வோரின் குழந்தைகளுக்கு, 11.12.2011 இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.இதுகுறித்து அரசு வெளியிட்ட அறிவிப்பு: தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும், "பல்ஸ் போலி யோ சிறப்பு முகாம்'கள் நடத்தப்பட்டு, ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு முறையான தவணைகளில் தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டு வந்தது. இதனால், 2004க்கு பின் போலியோ நோயால் எந்த குழந்தையும் பாதிக்கப் படவில்லை.

இருந்த போதிலும் வெளி மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு வேலை தேடி வருவோரின் குழந்தைகள் மூலம் இந்த நோய் பரவும் அபாயம் இருந்து வருகிறது.இவ்வாறு, அடிக்கடி இடம் பெயர்ந்து வாழ்வோரின் குழந்தை களுக்கு சரியான தவணைகளில் தடுப்பு மருந்துகள் கிடைப்பதில்லை.இதை கருத்தில் கொண்டு,இடம் பெயர்ந்து வாழ்வோரின் குழந்தைகளுக்கு போலியோ நோய்க்கு எதிரான தடுப்பு சக்தியை உருவாக்குவதற்காக, 11.12.2011 அன்று போலியோ சொட்டு மருந்து கொடுக்க, தமிழகம் முழுவதும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இதன்படி,
கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடம்,
மேம்பாலம்,
தொழிற்சாலை,
நெடுஞ்சாலை,
ரயில்வே பணி கள்,
செங்கல்சூளை,
நரிக்குறவர் தங்குமிடம்,
வேளாண் தொழிலாளர்கள் வசிப்பிடம்,
மீனவ பகுதி,
சாலையோர குடியிருப் புகள்,
 இலங்கை அகதிகள்
ஆகியோருக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.

பெண்டாவேலண்ட்' தடுப்பூசி:

pentavalent vaccine

குழந்தைகளை வெகுவாக அச்சுறுத்தி வந்த,

·                   தொண்டை அடைப்பான், 
·                  கக்குவான் இருமல்,
·                   ரண ஜன்னி ஆகிய நோய்கள், 

தமிழகத்தில் அகற்றப்பட்டு விட்டன. இந்த நோய்களுக்கு, டி.பி.டி., தடுப்பூசி போடப்பட்டு வந்தது. தற்போது, இந்நோய்களையும் சேர்த்து,
·                   ஹெப்படைட்டீஸ் பி தடுப்பு மருந்து,
·                  நிமோனியா காய்ச்சல்
·                  மூளைக் காய்ச்சலை தடுக்கும், "ஹிப்' தடுப்பு மருந்து

diphtheria, pertussis, tetanus, hepatitis B and haemophilus influenza type B (HiB)
ஆகிய நோய்களுக்கும்,"பெண்டாவேலண்ட்' என்ற ஒரே தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இம்மருந்து, இந்தியாவில் முதல்கட்டமாக, தமிழகம் மற்றும் கேரளத்தில் அறிமுகப் படுத்தப்படுகிறது. இது மிகவும் பாதுகாப்பானது என்பது, பரிசோதனைகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

"
பெண்டாவேலண்ட் தடுப்பூசியால், பக்க விளைவுகள் ஏதும் ஏற்படாது என, நிரூபிக்கப்பட்டுள்ளது.இருப்பினும்,முன்னெச்சரிக்கையாக, ராமப்புறங்களில் தடுப்பூசி போடும் இடங்களுக்கே, டாக்டர்கள் அனுப்படுவர்.இந்த தடுப்பு மருந்து, வெளிச்சந்தையில், 350 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆனால், எல்லா ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும், இலவசமாக வழங்கப்படும்,''


முதல்தமிழகத்தில், வரும் டிச., 17ம் தேதி, வேலூரில் நடக்கும் விழாவில், 
சுகாதாரத் துறை அமைச்சர் விஜய், இத்திட்டத்தை துவக்கி வைக்கிறார். 
வரும் டிச.21ம் தேதி முதல், தமிழகம் முழுவதும் இத்திட்டம் விரிவு படுத்தப்படும்.

09 December 2011

கவிஞர் ஜீவி


கவிஞர் ஜீவி என்கிற ஜி.வெங்கட்ராமன்

புதுக்கோட்டை துணை இயக்குனர் ( தொழுநோய் ) அலுவலகத்தில் சுகாதார ஆய்வாளாராகப் பணிபுரிகிறார். என் எழுத்துகளை யார் படிக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது., ஏன் எழுதுகிறேன் என்பதும் எனக்குத் தெரியாது', என்று எழுதுவது பற்றி 'தெளிவாக' கருத்துகளைப் பகிரும் படைப்பாளர்களிடையே, தன் எழுத்துகளை படிக்கும் வாசகன் யார், தன் எழுத்து யாருக்காக எழுதப்படுகிறது, எழுதுவதன் சமூகத் தேவை என்ன என்பது பற்றிய சரியான புரிதல்களோடு கால் நூற்றாண்டு காலமாக தமிழில் கவிதைகள் எழுதிவரும் கவிஞர் ஜீவி பொது சுகாதாரத்துறையை சேர்ந்தவர் என்பது நமக்கெல்லாம் பெருமை சேர்க்கக் கூடியது.
சமீபகாலமாக ”டைம்ஸ் ஆப் இந்தியா ” தொலைக்காட்சி விளம்பரத்தில் வரும்
ஏ....ஆராரோ ஆரிரரோ......
எங்கண்ணே ஆராரோ ஆரிரரோ......
குறிஞ்சி மலைத்தேனே கொண்டாடும் சந்தனமே.....
சரிஞ்சி படுத்திருக்கும் சென்பகமே கண் உறங்கு. (ஆஆ....)
நிலவே தூங்கும் வேள...நீயேன் தூங்கவில்லை
நிலவே தூங்கும் வேள...நீயேன் தூங்கவில்லை
ஆற்றங்கரை காற்றினிலே அன்பே கண் உறங்கு..... (ஆஆ.....)
ஆற்றங்கரை காற்றினிலே அன்பே கண் உறங்கு
பாடல் அறிவொளி இயக்க காலத்தில் இவர் எழுதியது தான்.

  • தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மர்றும் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளராக இருக்கிறார்.

வாழ்வை சரியான கோணத்தில் பார்ப்பதும்,அதனை பதிவு செய்வதும் இவரது கவிதைகளில் முன்னிலை வகிக்கிறது.

உதாரணமாக:

மீறல்

அழுத்தி அழுத்தி சீவினாலும் படியாமல்
நெற்றியில் விழுகிறது கற்றை முடி.
பார்த்துப் பார்த்து போட்டாலும்
டீச்சரின் கோட்டை விட்டு
விலகிப் போகிறது பையனின் 'ஆனா'.
தேடித் தேடி நடந்தாலும் பாதச்சுவட்டை விட்டு
தவறிப் போகிறது நடை.
எப்படித்தான் அலசினாலும் எங்காவது ஓரிடத்தில்
அதிகமாய் போய்விடுகிறது சட்டையில் நீலம்
அறைக்குள் வைத்தே வளர்த்தாலும்
ஜன்னலுக்கு வெளியே தலை சீட்டிச்
சிரிக்கிறது பூ !
ஒரே மாதிரி டிக் டிக் கேட்டு
வாழ்க்கை நகரவேண்டுமென
ஏன் நினைக்கிறாய் ?

(நைலான் ஊஞ்சல்)

இன்னொரு கவிதையில் ...

பித்தளை சட்டிகளுக்கு
புளிச்சக்கை.
சில்வர் தட்டுகளுக்கு
விம் பவுடர் .
வெள்ளி பாத்திரங்களுக்கு
விபுதி மட்டும்.
பளபளவென
விளக்கி வைக்கும் அம்மாவால்
கடைசிவரை விளக்கவேமுடியவில்லை
அப்பாவிடம் தன் மனசை...............

ஓட்டு வீடுகள் காங்கிரீட் வீடுகளாகவும்,கைவிசிறிகள்,ஃபேன்,ஏர்கூலர்,ஏசி என மாற்றம் பெறுகிறது.கரி படிந்த சமையலறையில் முன்பு அம்மாக்கள் சமைத்தார்கள்.இப்போதோ டைல்ஸ்பதித்த அழகிய சமையலறையில் பெண்கள் சமைக்கிறார்கள்.வீடுகள் தோறும் புறத்தோற்றம் மாறியிருக்கிறதேயொழிய அதில் வசிக்கும் பெண்களின் மன வெட்கை குறையவில்லை.’ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவில் ஓங்கி இவ்வையம் தழைக்குமாம்’எனும் பாரதி வரிகளை வழிமொழிகிற கவிதைகளை கவிஞர்கள் இன்னும் நிறைய எழுத வேண்டும்.” என தானும் எழுதுவதோடு சக கவிஞர்களை கைபிடித்து தடம் பார்த்து அழைத்துச் செல்லும் பணியினையும் மேற்கொண்டு வருகிறார்.

படிக்கும் வாசகனின் கண்களைக் கட்டி, இருட் புதருக்குள் இழுத்துப் போகும் பம்மாத்துத் தனங்கள் இல்லாமல், வாசகனருகே சக நண்பனாய் அமர்ந்து தோள்மேல் கைபோட்டு சிநேகமாய்ப் பகிர்ந்து கொள்ளும் எளிய-இயல்பான மொழியிலான கவிதைகள் ஜீவியினுடையவை.

இதுவரை வெளிவ்ந்துள்ள கவிதை தொகுப்புகள்:
  • வானம் தொலைந்து விடவில்லை ( 1993)
  • இருவேறு முகங்கள் (1996)
  • நைலான் ஊஞ்சல் ( 2001)
  • சின்னஞ்சிறகுகள் (2003)
  • அஞ்சறைப்பெட்டி (2007)

கட்டுரைத் தொகுப்புகள்

  • கவிதை குறித்த சொற்கள் (2008)
  • கவிதையும் கவிதை சார்ந்தும் (2011)
தமிழ்நாடு முழுதும் பட்டிமன்றம் கவியரங்கம் வழக்காடுமன்றம் உரைவீச்சு போன்ற பல்வேறு நிகழ்வுகளில் பங்கெடுத்துவரும் இவர் புதுக்கோட்டை மாவட்ட அறிவொளி இயக்க ஒருங்கிணைப்பாளராக இருந்துள்ளார்.(அப்போது தான் குறிஞ்சி மலைத்தேனே பாடல் எழுதப்பட்டது).

தமிழ் ஆட்சி மொழியாக 50 ஆண்டுகள் ஆனதை ஒட்டி தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி பண்பாட்டு துறை நடத்திய கவிதை போட்டியில் பரிசுபெற்றார்.

  • கவிதைஉறவுபரிசு,
  • தாரக அரக்கட்டளை பரிசு,
  • ரோட்டரி,லயன்ஸ் சங்கங்கள் பாராட்டுக்களை பெற்றவர்.
இந்த விருதுகளையெல்லாம் தாண்டி மக்களிடமிருந்து கிடைக்கும் வரவேற்பு இவரை மிகுந்த உற்சாகப்படுத்துகிறது என்கிறார்.ஒரு அரை மணிநேர பேச்சுக்காக 8 மணிநேரம் பிரயாணம் செய்து போக வேண்டியிருக்கும்,சில தருணங்களில் மேடைக்கு பின்புறமே முகம் கழுவி வந்த வேகத்தில் மேடை யேற வேண்டியதிருக்கும்.ஆனாலும் மக்களின் ஊக்கமும் தமிழின் ஆர்வமும் சளைக்காமல் இயங்கவைக்கிறது என்கிறார் ஒரு பேட்டியில்.முதல் நாள் இரவு இவரது பேச்சை கேட்ட ஒரு சாலையோர  வியாபாரி பேருந்தில் அமர்திருக்கும் இவர் மடியில் இவர் கேட்காமலே போட்டுச்செல்லும்  கடலை பொட்டலத்தை மக்களிடமிருந்து கிடைத்த விருதாக கருதும் இவர் யாருக்காக இயங்குகிறார் எனத் தெளிவாக்குகிறது.முற்போக்கு முகாம் என்றாலே வரட்டு பிரச்சாரக் கவிதை என்கிற பார்வை சில புத்தி ஜீவிகளிடம் இருக்கிறது.அந்த கருத்துகளை தகர்த்தெரிகிறது இவரது கவிதைகள்.

உதாரணமாக

ச்சே.. சின்னப்புள்ளையாவே இருந்துருக்கலாம்

கொட்டையோடு விழுங்கிய இலந்தை
மரமாய் முளைக்குமோ?
கிளைவிட்டு வளர்ந்து வயிறு கிழிக்குமோ ?

புத்தகத்தில் வைத்த மயிலிறகு
நான் ஊருக்குப் போன நாள் பார்த்து
குட்டி போட்டால்
யார் அதற்கு தீனி போடுவார் ?

பள்ளிநாட்களில்
பால்யவயதில்
இவ்வாறாக
தினமும் ஒரு கவலை
மனதில் எழும்
 0
 வேலைகிடைக்குமா ?
கிடைத்தது நிலைக்குமா ?
வருமானம் போதுமா ?
வாழ்க்கை சிறக்குமா ?
வளர்ந்த பிறகு
வளர்கின்ற கவலையில்
மாட்டிக்கொள்கிற மனசு
நினைத்துப் பார்க்கும்
மீண்டும் வராதா ?
அந்தப் பால்ய நாட்கள் !







இவர் சன் டிவி,பொதிகை,ஜெயா,மக்கள்,விஜய்,ராஜ்
என பல்வேறு தொலைக்காட்சி களில் பேட்டி அளித்துள்ளார்.

பல்வேறு வார,மாத இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகைவருகிறது.
இணைய இதழ்கள் அம்பலம்,ஆறாம்திணை,இந்தாம் போன்றவைகளில் இவர் தன் பங்களிப்பை செய்துள்ளார்.
அப்துல்கலாம்,சுஜாதா ஆகியோர் இவர்து படைப்புகளை குறிப்பிட்டு எழுதியுள்ளனர்.
இதுவரை பேராசிரியர் மோகனசுந்தரம், பழனித்துரை ஆகியோர் இவரது கவிதைகளை ஆய்வு செய்து எம்ஃபில் பட்டம் பெற்றுள்ளனர். 
இவ்வளவு ஆளுமைகள் நிரம்பிய இவர் எமது பொதுசுகாதாரத்துறையில் பணியாற்றுகிறார் என்பது எங்களுக்கெல்லாம் பெருமை அளிக்கக்கூடிய விஷயம்.
ஒரு கவிதையில் இப்படி சொல்கிறார்.

'ஒரு
இரயில்எஞ்ஜினாய்
எப்போதும்இயங்கு.
கூடவேபலரைச்
சேர்த்துக்கொண்டு
உற்சாகமாகக்
கூவிக் கொண்டு...'

வாழ்த்துக்கள் ஜீவி
உஙகளுடன் கம்பார்ட்மெண்ட்டாக இருப்பது எங்களுக்கு பெருமிதம்

இவரது face book முகவரி
http://www.facebook.com/profile.php?id=100001860607183
முகவரி
211/7ஏ பொற்குடையார் கோயில் தெரு
அறந்தாங்கி 614616
செல்:
9443120490
04371-270490
இமெயில்
GEEVEEKAVI@GMAIL.COM


06 December 2011

ஒரு டாக்டரின் டயரியிலிருந்து

                     பொதுவாக பத்திரிகைகளில் வெளிவரும் டாக்டர்கள் பற்றிய ஜோக் நிறைய படித்திருக்கிறேன்.நர்ஸ்ஸுடன் சரசமாடுவது,நோயாளிகளிடம் அதிக ஃபீஸ் வாங்குவது,ஆப்பரேஷன் சக்சஸ் ஆகாமல் நோயாளியை சாகடிப்பது,மருந்தை மாற்றிக் கொடுப்பது,கவனக்குறைவு ஆப்பரேஷன்,என இவைகள் இருக்கும.

உதாரணமாக,

”நோயாளி:  நான் பிழைக்கிறதுக்கு ஏதும் வழி இருக்கா?
உறவினர்:  ஒரு வழிதான் இருக்கு. இந்த ஹாஸ்பிட்டளோட பின் வழி. எந்திருச்சு ஓடி போயிடு.. பிழைசுக்குவே..”
                                 
நோயாளி„ டாக்டர் குருட்டு அதிர்ஷ்டம்னா என்ன?
 டாக்டர்„  நான் ஆபரேஷன் செய்தும் என் முன்னால் உட்கார்ந்து பேசறீங்களே அதான்

நோயாளி„ ஆபரேஷன் பண்றப்ப பாதியில் கரண்டு போயிட்டா என்ன டாக்டர் பண்ணுவீங்க?

 டாக்டர்„ அதை அந்த நர்சிடம் கேளுங்க...?

 நர்ஸ்„ போங்க டாக்டர்* எனக்கு வெட்கமா இருக்கு.. 

நோயாளி„ ?.....?......?.....? 

இப்படியாக எல்லாவற்றிலுமே  கோமாளிகளாகவும்,பணத்தாசை கொண்டவர்களாகவும்,காமுகனாகவும், டாக்டர்கள் சித்தரிக்கப் படுகிறார்கள்.மனிதர்களின் கடைசிக்கு முந்தைய நம்பிக்கை டாக்டர்கள் தான் என்றாலும் இத்தகைய ஜோக்குகள் காலம் காலமாக பல்வேறு மொழிகளிலும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.இது ஒரு அழகியல் முரண்.

                உண்மையில் டாக்டர்கள் தங்கள் அன்றாட வாழ்வில் சந்திக்கும் பல்வேறு நகைச்சுவைகளை ஆவணப்படுத்தினால் கணக்கிலட்ங்காது.ஒவ்வொரு நாளும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காணும் நகைச்சுவைகள் எண்ணற்றவை.”கார்டூனிஸ்ட் மதனின் “முன்னெசரிக்கை முத்தண்னா” “ரெட்டைவால் ரெங்குடு” போன்ற பல கேரக்டர்களை டாக்டர்கள் தினமும் சந்தித்து வருகிறார்கள்.அதை பற்றி பேசவோ,பதியவோ அவர்கள் முனைவதுமில்லை ஒருசிலரைத்தவிர.பெரும்பாலும் நோயாளிகளின்அறியாமைதான் இதன் முக்கிய கருவாக இருக்கும். அதனால் இதனை பதிவு செய்வதென்பது கேலி செய்வதாகிவிடுமோ என்ற அச்சமும் இருக்கும். மேலும் நோயாளிகளின் அந்தரங்கம் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமாகி விடுகிறது.இதர்கெல்லாம் மேலாக அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை.

ஆனால் மாறாக சமீபத்தில் டாக்டர்.எம்.கே.முருகானந்தன் அவர்களின் ”ஒரு டாக்டரின் டைரியிலிருந்து” மென் நூல் இணையத்தில் படிக்கக் கிடைத்தது.ஒரு டாக்டரின் அனுபவங்கள் அற்புதமாக பதிவு செய்யப்படுள்ள நூல் இது.இவர் ஈழத்தை சேர்ந்த இவரது ஒவ்வொரு கட்டுரையிலும் (பத்தி) நகைச்சுவை கொப்பளிக்கிறது.எதுவும் வலிந்து ஏழுதப்படவில்லை.மிக எதார்த்தமான பதிவுகள் அவை.நகைச்சுவையினூடாக ஈழத்தின் அவலம், மருத்துவத் தொழிலில் சந்திக்கக் கூடிய அபத்தங்கள் ஆகியவைகள் நேர்த்தியாக பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உதாரணமாக....
               ஈழத்தில் போர்க்காலங்களில் இவர் புலம் பெயறாமல் மக்களோடு இருந்து சேவை செய்திருக்கிறார்.அதை அவர் பெருமையாக்வும் நினைத்துக் கொண்டிருக்கிறார்.”
             ஆனால் நோயாளி இன்னொருவருடன் பேசிக்கொள்கிறார் ”கெட்டிக்கார டாக்டர்மார்லாம் நல்ல வேலை எடுத்துக் கொண்டு வெளியே போட்டினம்.இஞ்சை மிஞ்சி இருப்பவர்களுக்கு கெட்டிக்காரத்தன்ம் காணாது எண்டு போல” - எப்படி?..இதன் தலைப்பு ”வெளிநாட்டிற்கு ஓடித் தப்பலாமா?” 

இன்னொரு கட்டுரையில் டாக்டர்கள் கல்யாணவீடுகளில் சந்திக்கிற நிகழ்வுகள் பற்றிய குறிப்பு வருகிறது ..நல்லது கெட்டது எனப்பாராமல் டாக்டரை பார்த்தவுடன் நோவுபற்றியே பேசும் மனிதர்களை சுட்டுகிறார்.கொடுமையாக குழந்தைகளிடம் கூட “டாக்டர் மாமா ஊசிபோட்டுவார்” என டாக்டர்களை பூச்சாண்டியாக்குவர்களை வேடிக்கையாக இவர் குறிப்பிட்டாலும் அதன் பின்னுள்ள வேதனை உணரமுடிகிறது.

ஒரு ஞாவிறு மாலைப்பொழுதை கூறத்துவங்கும் இவர் இப்படி சொல்கிறார் “ அது ஓர் அமைதியான ஞாயிறு மாலை! ( ஆச்சிரியக் குறி கவனத்தில் கொள்ள வேண்டும்) குண்டடிப்புச் சத்தங்களும் ஷெல்களின் ஓசைகளும் ஹெலியின் வட்டமிடல்களும் கேட்காத அந்திமாலைப் பொழுது” என்கிறார்.ஈழத்தின் களேபரம் படிப்பவர் கண்களில் நிறைகிற்து.

”மருந்து கட்டாவிட்டால் சிறிய காயம் என கொமிட்டிக்காரர் லீவு தரமாட்டினம்.அடிக்கடி கோயில் பூசைக்கு குளிப்பது சிரமமாக இருக்கும்” என்கிற கோயில் அய்யமாருக்கு சிறிய காயத்திற்கு பெரிய கட்டுகட்டி விடநேர்கிறது டாக்டருக்கு.

வயது போனவர்கள் தானே என அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் செய்யாத உறவுகளை விமரிசிக்கிறார்.

போனவரியம் இளையவள் ஷெல் அடிச்சு என்ரை கண்முன்னாலே துசிச்சு செத்துப்போனாள்........மூத்தவன் போனமாதம் ஹெலி சுட்டு சன்னம் வயித்தில பட்டு பத்துநாளா ஆஸ்பத்திரியில் கிடந்து அவனும் போட்டான்......என கூறி ஏற்கனவே செய்த குடும்பக் கட்டுபாட்டு ஆப்பரேஷனை மாற்று ஆபரேஷன் செய்ய முடியுமா என கதறும் தகப்பனை படிக்கும் போது “ விதியே விதியே என் செய்ய நினைத்தாய் எம் தமிழ்ச்சாதியை”  என கண்கள் கலங்குகிறது.

”உன்னுடை பரம்பரை மாத்திரமல்ல ,எங்கடை தமிழ்ச்சமுதாயமே அழிஞ்சி போகாமால் இருக்க வேணும் என்றால் , இனி இங்கே ஒரு கருத்தடை ஆப்பரேஷன் கூட நடக்கக் கூடாது” என எண்ணிக்கொண்டேன் என முடிக்கிறார் அக்கட்டுரையை.

போரும்,அடக்குமுறையும் குதறிப்போட்ட உயிருக்கு உத்தரவாதமில்லாத ஒரு சமூகத்தில் குடும்பக்கட்டுப்பாடு ஆப்பரேஷன் அபத்தமாகத்தான் படுகிறது.இந்தக் கட்டுரையில் இது பல்வேறு பாத்திரங்கள் வாயிலாக விவாதம் நம்மை அடைகிறது.நல்ல உத்தி.

இன்னொரு கட்டுரையில் மண்ணெண்னைகடையில் கூட மருந்து விற்கிறார்கள் என்கிறார்.மருந்து வியாபாரிகளிடமிருந்து தமிழ் மக்களை காக்க க்டவுளாலும் முடியுமா என கேட்கிறார்.

இந்தக்கடுரைகள் 1986 -87 களில் எழிதப்பட்டு சஞ்சிகைகளில் பிரசுரிக்கப் பட்டவை, டொமெனிக்ஜீவா முகவுரை எழுதியுள்ளார்.மருத்துவத் துறை தாண்டிய ஒரு அற்புதப் படைப்பு இது.

இவரது வலைப்பூ

இது போல இன்ன பிற டாக்டர்களின் அனுபவப்பதிவுகள்

மரு.ஜா.மரியானோ அண்டோ புருனோ மஸ்கரனாஸ்

டாக்டர் சுரேஷ்


புத்தகம் டவுன்லோட் செய்ய




ஒரு டாக்டரின் டயரியிலிருந்து





  



05 December 2011

டிசம்பர் 10 முதல் மகப்பேறு உதவித்திட்டம் ரூ12000

டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு நிதி உதவித்திட்டம் 10 டிசம்பர் 2012 முதல் அமல் படுத்தப்பட உள்ளதாக பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.டிசம்பர் 2,3 தேதிகளில் சென்னையில் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய் அவர்கள் தைலைமையில் நடந்த துணை இயக்குனர்கள் ஆய்வுக்கூட்டத்திற்கு பின் இச்செய்தி வெளியாகியுள்ளது.

எக்ஸ்ரே, அல்ட்ராசவுண்ட்,ஸ்கேன்,மற்றும் இரத்தப் பரிசோதணை உபகரணங்கள் பழுதானால் அதனை பழுது நீக்கம் செய்ய உதவும்  வகையில் ஆன்லைன் மூலம் கண்காணிக்கும் மென்பொருள் குறுந்தகடை நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய் அவர்கள் வெளியிட்டுள்ளார்.


60 ஆரம்ப சுகாதார நிலையங்களில் புதிய பல்சிகிச்சை மையம்

அறுபது ஆரம்ப சுகாதார நிலையங்களில் புதிய பல்சிகிச்சை மையம் ஜனவரி 2012 துவங்கப்படும் .வேலூர்,திருச்சி,கடலூர்,திருவண்ணாமலை,தஞ்சை உள்ளிட்ட பல மாவட்டங்களில் வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் மேற்கண்ட மையம் துவக்கப் பட உள்ளது.05.12.2011 தினமலர் பத்திரிகையில் இயக்குனர்  அவர்கள் கூறியதாக வெளியாகியுள்ள  செய்தி.

 படத்தின் மீது கிளிக் செய்து செய்தி முழுதும் படிக்கலாம்.